கமல் நடிப்பில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படம் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. அதற்கான ப்ரொமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தான் சமீபத்தில் நடந்த இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது கமல்ஹாசன் அவரிடம், “தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது. அதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்” என்று பேசியிருந்தார். இது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே கமலுக்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் கமல்ஹாசனை விமர்சனம் செய்தும், தக் லைஃப் பட போஸ்டர்களை கிழித்தும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் கன்னட மொழி குறித்து கமல் பேசியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இல்லை என்றால் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் தடை செய்வோம் எனவும் கர்நாடக அமைச்சர் கூறியிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு, “கமல்ஹாசன் நாளைக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் படம் வெளியாகாது” என்று அறிவித்துள்ளார். இது தவிர பல்வேறு கன்னட அமைப்புகள் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தை தடை செய்யக் கோரியிருக்கின்றன.
இதற்கிடையில் கமல்ஹாசன், “தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என்ற கருத்தில் மன்னிப்புக்கு இடமில்லை. அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது. இது பதில் அல்ல விளக்கம். வரலாற்று ஆய்வாளர்கள், மொழியாளர்கள், தொல்லியல் நிபுணர்களிடம் இந்த பிரச்சினையை விட்டு விட்டோம். நான் கூறியதற்கு இன்னொரு கோணமும் இருக்கலாம். இது என்னை போன்ற அரசியல்வாதிகள் பேச வேண்டிய விஷயம் இல்லை. இதற்கு வல்லுனர்கள் பதில் கூறுவார்கள்” என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.