ஜெயிலர் 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் என்று கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினி நடிப்பில் சமீபத்தில் ‘கூலி’ திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போடுகிறது. அதே சமயம் ரஜினி, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்திலும் நடித்து வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இமாலய வெற்றி பெற்றதனால் ‘ஜெயிலர் 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. ரஜினியின் ‘கூலி’ திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே ரசிகர்கள் அனைவரும் அடுத்தது ‘ஜெயிலர் 2’ படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பும் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இப்படமானது அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது ஏற்கனவே வெளியான தகவலின் படி நடிகர் எஸ்.ஜே. சூர்யா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். விரைவில் தொடங்க உள்ள இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா இணைய உள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ‘ஜெயிலர் 2’ படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுராஜ் வெஞ்சரமூடு போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருவதாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் உலா வருவது குறிப்பிடதக்கது.