விஷால் – சாய் தன்ஷிகாவின் திருமணம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷால் தற்போது ‘மகுடம்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது தவிர விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் பணிபுரிகிறார். இன்று (ஆகஸ்ட் 29) புரட்சி தளபதி என்று ஏராளமான ரசிகர்களால் கொண்டாடப்படும் விஷாலின் பிறந்தநாள். 48 வயதாகும் விஷால் இதுவரை தன்னுடைய திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டிருந்தார். அதாவது கடந்த 2016ஆம் ஆண்டிலேயே நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்னர் தான் தன்னுடைய திருமணம் நடக்கும் என அறிவித்திருந்தார். இதற்கிடையில் வரலட்சுமி, அஞ்சலி போன்ற நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். அதன் பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தங்களின் திருமணம் எப்போது நடக்கும்? என்பதை ஆகஸ்ட் 29ஆம் தேதி அறிவிப்பேன் எனவும் கூறியிருந்தார் விஷால்.
எனவே இன்று சென்னை கீழ்ப்பக்கத்தில் உள்ள மாதா தேவாலயத்தில் ஆதரவற்றோர்களுடன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய விஷால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், உங்களின் திருமணம் எப்போது? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஷால் தன்னுடைய திருமண தேதியை நண்பகல் அறிவிப்பேன் என கூறியிருக்கிறார். இது தவிர விஷால் மற்றும் சாய் தன்ஷிகாவின் திருமண நிச்சயதார்த்தம் இன்று சென்னை அண்ணா நகரில் உள்ள விஷாலின் இல்லத்தில் வைத்து நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிகழ்வில் விஷாலின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.