புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடியை பாராட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். அதற்கான பணிகள் 2021 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது அக்கட்டிடம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இன்று நண்பகல் 12 மணி அளவில் திறந்து வைக்கப்பட உள்ளது.

இந்த இந்திய புதிய நாடாளுமன்றத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார்.
இந்த கட்டிடத்தில் முக்கிய அம்சமாக 1947-ல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த போது, முன்னாள் பிரதமர் நேருவிடம் ஆங்கிலேயர்கள் வழங்கிய செங்கோல் மக்களவை சபாநாயகரின் இருக்கை அருகே நிறுவப்பட உள்ளது. இந்த செங்கோல் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டதால் தமிழர்களின் அடையாளமாக விளங்குகிறது.
இதுகுறித்து, ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“இந்திய நாட்டின் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் ஜொலிக்க போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் – செங்கோல்
தமிழன்டா: தமிழர்களுக்கு பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
ரஜினியின் நன்றிக்கு பதில் அளிக்கும் விதமாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்
“தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கலாச்சாரத்தில் ஒட்டு மொத்த தேசமும் பெருமை கொள்கிறது. புதிய நாடாளுமன்றத்தில் இந்த தலைசிறந்த மாநிலத்தின் கலாச்சாரம் பெருமைக்குரிய இடத்தை பெறுவது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.


