இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜின் மறைவு செய்தி பலரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 48 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த மனோஜின் மறைவிற்கு பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் மு.க. ஸ்டாலின், உதயநிதி, விஜய், சூர்யா, சிவகுமார், மணிரத்னம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் சென்று மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் மனோஜின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த திரைப்பிரபலங்கள் பலரும் மனோஜ் குறித்து உருக்கமாக பேசியுள்ளனர். இயக்குனர் பேரரசு பேசுகையில், “எல்லா இயக்குனர்களுக்கும் குருவாக இருக்கக்கூடியவர் பாரதிராஜா. மகனை இழந்த அவருடைய இந்த நிலைமையை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. நம்ம பெத்த பிள்ளைக்கு நம்மளே புள்ளி வைக்கிறதுதான் மிகப்பெரிய துயரம். பாரதிராஜா பல்வேறு விருதுகள், பாராட்டுக்கள் பெற்றவர். அவருக்கு ஒரே ஒரு குறை தான். தன் மகன் பெரிய நடிகராக, இயக்குனராக வெற்றி அடைய வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை. நேற்று கூட அதைப்பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வாசு பேசுகையில், “எங்களுடைய கலை உலகத்தைச் சேர்ந்த எங்களுக்கெல்லாம் உறுதுணையாக இருந்த பாரதிராஜாவின் மகன் மனோஜ் மறைந்த செய்தி கேட்டு தாங்க முடியாத துயரத்தில் கலை உலகமும் தமிழக மக்களும் இருக்கின்றனர். இந்த மரணத்தை பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மரணம் எல்லோருக்கும் வரும் ஆனால் இந்த வயதில் வரக்கூடாது. அதை தாங்குகிற சக்தி அவரைப் பெற்றவர்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. பாரதிராஜாவை பார்த்துவிட்டு எங்களுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. மனோஜ் மீது பாரதிராஜா உயிராக இருப்பார். எப்போதும் அவர் சிரிப்புடன், ஓடி வந்து கட்டிப்பிடிப்பது தான் நினைவில் இருக்கிறது. அவருடைய குடும்பத்திற்காக ஆண்டவனை வேண்டுகிறேன்” என்றார்.
“மனோஜின் மறைவு அதிர்ச்சியாக இருக்கிறது. அவரைப் பற்றி என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. ஆறுதல் சொல்றதுக்கு கூட வார்த்தைகளே இல்லை. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்” என்று நிழல்கள் ரவி பேசினார்.
நாசர் பேசும்போது, “அவரை இழந்து தவிக்கின்ற பாரதிராஜா சாருக்கு ஆறுதல் சொல்ல தெரியவில்லை. மனோஜை எனக்கு ஆறு வயதில் இருந்தே தெரியும். அவருக்கு பல ஆசைகள், கனவுகள், கட்டாயங்கள் இருந்தன. மனோஜ் எல்லோரிடமும் நட்பாக இருப்பார். அவருடைய கஷ்டங்களை வெளியில் காட்டாமல் மகிழ்ச்சியாக இருப்பதாக தான் வெளியில் காட்டிக் கொள்வார். மனோஜின் குழந்தைகள் தைரியமாக இருக்க வேண்டும். மனோஜ் இல்லை என்றாலும் அவர்களின் குடும்பத்திற்காக நாங்கள் கூடவே இருப்போம்” என்று கூறியுள்ளார்.
கருணாஸ் பேசும்போது, “எந்த இடத்தில் பார்த்தாலுமே பாசமாக, உரிமையாக பேசுவார் மனோஜ். விருமன் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தச் சின்ன வயதில் அகால மரணத்தை இறைவன் கொடுக்கவே கூடாது. பெரிய இயக்குனரின் மகன் என்ற தலைக்கனம், கர்வம் எதுவுமே இருக்காது. எளிமையாக, எதார்த்தமாக அனைவரிடமும் நட்பாக பழகக் கூடியவர் மனோஜ். சின்ன வயதில் அவர் இறந்தது மிகவும் வருத்தம் தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
பார்த்திபன் பேசுகையில், “மரணம் என்பது இயற்கை சம்பந்தப்பட்டது. ஆனால் சின்ன வயதில் மரணம் என்பதை தாங்க என்னாலும் முடியவில்லை. பாரதிராஜா எப்படி தாங்கிக் கொள்வார். ஒரு மகனின் இறப்பு என்பது சாதாரணமானது இல்லை. மனோஜுக்கு நிறைய கனவுகள் இருந்தது. அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும்” என்றார்.
மனோஜ் குறித்து எம்.எஸ். பாஸ்கர், “இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜின் மறைவை நான் நேற்று இரவு தூக்கத்தில் இருக்கும்போது தான் கேள்விப்பட்டேன். என்னால் நம்பவே முடியவில்லை. திடீர் மரணம் வேதனை தருகிறது. நான் எப்போது எந்த படம் பண்ணாலும் என்னை தொடர்பு கொண்டு பாராட்டுவார். இந்த முதிர்ந்த வயதில் பாரதிராஜாவிற்கு வந்த மிகப் பெரிய சோகம் இது. அவரை ஆறுதல் சொல்லி தேற்றுவது மிகவும் கடினம். இறைவன் பாரதிராஜா அவருக்கு தங்கக்கூடிய சக்தியை தர வேண்டும். அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்” இன்று தெரிவித்துள்ளார்.
நடிகர் பாண்டியராஜன், “மரணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். மரணம் எல்லோருக்கும் வரக்கூடியது தான். பாரதிராஜா, ஊருக்கு எந்த உணர்ச்சியை எப்படி காட்ட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தவர். ஆனால் ஒரு துக்க நிகழ்ச்சியில் எப்படி இருக்க வேண்டும் என எங்களுக்கு காட்டிவிட்டார். இந்த வயதில் யாருக்குமே மரணம் வரக்கூடாது. அதுவும் இதுதான் வாழ்க்கையில் எல்லாத்தையும் கற்றுக்கொண்டு பக்குவப்படுகின்ற வயது இது. இந்த வயதில் மரணம் என்பது தாங்கிக்கொள்ள முடியாதது. என் மகனும், மனோஜும் நண்பர்கள். என் மனைவி மனோஜ் பற்றி பேசிக்கொண்டே இருப்பார். என் குடும்பத்தில் உள்ள ஒரு பிள்ளையை பறிகொடுத்துவிட்டோம். யாருக்குமே இந்த வயதில் மரணம் வரவே கூடாது” என்று பேசியுள்ளார்.