சூர்யா 47 படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது தனது 46வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கருப்பு’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அல்லது ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் சூர்யா, ‘ஆவேஷம்’ படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார்.
‘சூர்யா 47’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை சூர்யா புதியதாக தொடங்க இருக்கும் ‘ழகரம்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்போவதாக சொல்லப்படுகிறது. இது தவிர சுசின் ஷியாம் இதன் இசையமைப்பாளராக பணியாற்ற இருக்கிறார் என்றும் தகவல் கசிந்துள்ளது. அடுத்தது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. ஏனென்றால் கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து நடிகர் சூர்யா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறாராம். இவருடன் இணைந்து நஸ்ரியா, நஸ்லேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பகத் பாஸில் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.
ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் 8ஆம் தேதி கேரளாவில் தொடங்க இருக்கிறதாம். அதற்கான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், படக்குழுவினர் மற்ற லொகேஷன்களையும் தேடி வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்களும், படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என நம்பப்படுகிறது.


