நடிகர் பார்த்திபன், இட்லி கடை படம் குறித்து வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷின் 52வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் இட்லி கடை. இந்த படத்தை தனுஷ் தானே இயக்கி நடித்துள்ளார். படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். மேலும் அருண் விஜய், ராஜ் கிரண் மற்றும் பலர் நடித்துள்ளனர். நடிகர் பார்த்திபன் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். கிரண் கௌசிக் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படமானது 2025 அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன்படி ஏற்கனவே படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இன்னொரு தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய ‘ஆடுகளத்தில் நான் நடிக்க முடியாமல் போனதும், இணைந்து நடித்த ‘ சூதாடி’ இடையில் நின்று போனதும், இவையாவையும் ஈடு கட்டும் விதமாக ‘ இட்லி கடை’யில் ஒரு சிறு மினி இட்லியாக கௌரவ வேடத்தில் நடிக்க அவரே அழைத்த போது, மறுக்காமல் ஒப்புக் கொண்டேன்.… pic.twitter.com/NU8IU1W2Mf
— Radhakrishnan Parthiban (@rparthiepan) August 16, 2025

அந்த பதிவில், “இன்னொரு தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய ஆடுகளத்தில் நான் நடிக்க முடியாமல் போனதும் இணைந்து நடித்த ‘சூதாடி’ இடையில் நின்று போனதும், இவையாவையும் ஈடுகட்டும் விதமாக இட்லி கடையில் ஒரு சிறு மினி இட்லியாக கௌரவ வேடத்தில் நடிக்க அவரே அழைத்த போது, மறக்காமல் ஒப்புக்கொண்டேன். நேற்று டப்பிங் பணிகள் நிறைவு பெற்றது. இருப்பினும் சக்தி கொண்ட இதயத்தோடு, எறும்பினும் சுறுசுறு உழைப்போடு, சகலகலா வல்லவனாக, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ் மிளிரினால் (மிருனாள் என தவறாக வாசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல ஏனெனில் அதுதான் பிசுபிசுத்த கிசுகிசுவாய் போய்விட்டதே) அது ஆச்சரியம் இல்லை என்பதை என் கண்கூடாக கண்டேன் இட்லி கடையில். அக்டோபரில் வெந்துவிடும் சாரி வந்துவிடும்” என்று குறிப்பிட்டு தனுஷுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.