பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது.
பிரதீப் ரங்கநாதன் கோமாளி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் லவ் டுடே எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்த நிலையில் இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அந்த வகையில் நானும் ரெளடி தான் படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே திரைப்படத்தில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அதே சமயம் இவர், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வரும் டிராகன் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், கே எஸ் ரவிக்குமார், ஜார்ஜ் மரியான் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படமானது 2025 பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ‘Rise of Dragon’ எனும் முதல் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை அனிருத் மற்றும் நடிஷா தாமஸ் ஆகியோர் பாடியுள்ளனர். விக்னேஷ் சிவன் இப்பாடல் வரிகளை எழுதியுள்ளார். லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.