பிரதீப் ரங்கநாதனின் டியூட் பட வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் டுடே, டிராகன் ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த நிலையில் இவருடைய ‘டியூட்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வந்தது. அதன்படி கீர்த்திஸ்ரன் இயக்கத்தில் உருவாகி இருந்த இப்படம் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனின் ஸ்டைல், நடிப்பு, படத்தின் காமெடி காட்சிகள் ஆகியவை பாராட்டப்படுகின்றன. இருப்பினும் இந்த படத்தின் திரைக்கதை இன்னும் வலுவாக அமைக்கப்பட்டிருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.22 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது. அதைத் தொடர்ந்து படக்குழு புதிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் படம் வெளியான முதல் மூன்று நாட்களில் உலக அளவில் ரூ.66 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் இப்படம் 100 கோடி கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைத்திருந்தார். இதில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து சரத்குமார், மமிதா பைஜு மற்றும் பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.