பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டியூட் படத்தின் திரை விமர்சனம்.
அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நடிகை மமிதா பைஜு, பிரதீப் ரங்கநாதனின் தாய்மாமன் மகளாக நடித்துள்ளார். இருவரும் நண்பர்களாக ஜாலியாக சுற்றித் திரிகின்றனர். ஒரு கட்டத்தில் மமிதாவிற்கு பிரதீப் மீது காதல் மலர்கிறது. ஆனால் பிரதீப், மமிதாவை தோழியாக தான் பார்ப்பதாக கூறுகிறார். சில மாதங்களுக்கு பிறகு பிரதீப்-க்கு மமிதா மீது காதல் ஏற்படுகிறது. ஆனால் அப்போது மமிதா, தான் வேறொருவரை காதலிப்பதாக கூறிவிடுகிறார். அதன் பிறகு அவருடைய காதலை சேர்த்து வைக்க முடிவு செய்கிறார் பிரதீப். ஆனால் பிரதீப் ரங்கநாதனின் தாய்மாமன் சரத்குமார், பிரதீப் – மமிதா இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். இறுதியில் பிரதீப் – மமிதாவுக்கு திருமணம் முடிந்ததா? அல்லது பிரதீப், மமிதாவை அவருடைய காதலருடன் சேர்த்து வைத்தாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

வழக்கம்போல் பிரதீப் தனக்கான ஸ்டைலில் மிரட்டி இருக்கிறார். பொதுவாகவே அவருடைய மேனரிசம் பலருக்கும் பிடிக்கும். இந்தப் படத்திலும் அவர் புல் எனர்ஜியுடன் களமிறங்கி இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. அதாவது காதல், காமெடி, எமோஷன் என அனைத்து காட்சிகளிலும் கலக்கியுள்ளார் பிரதீப். குறிப்பாக பாத்ரூமில் அழும் காட்சி மற்றும் சாய் அபியங்கரின் இசை இரண்டும் சேர்ந்து அனைவரையும் கண்கலங்க வைக்கிறது. இது தவிர துருதுருவென வரும் மமிதா சில இடங்களில் வரும் எமோஷனல் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுகிறார். சரத்குமாரின் கதாபாத்திரம் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. மொத்தத்தில் ஜாதி என்ற ஒரு வார்த்தையை வைத்து சுவாரஸ்யமான திரைக்கதையை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் கீர்த்திஸ்வரன். இது தவிர பின்னணி இசை, ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு பிளஸ் பாயிண்ட்களாக அமைந்துள்ளன. இருப்பினும் இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகள் பெரிய அளவில் கனெக்ட் ஆகவில்லை. ஹீரோவை ஓவர் நல்லவராக காட்டி இருப்பது கொஞ்சம் சினிமாத்தனமாக தோன்றுகிறது. மொத்தத்தில் லவ் டுடே, டிராகன் படங்களை போல் இந்த படமும் இளைஞர்களை கவர்ந்து தீபாவளி விடுமுறையை கொண்டாடும் விதமாக அமைந்துள்ளது.