புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் அல்லு அர்ஜுன் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான புஷ்பா தி ரைஸ் எனும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தினை சுகுமார் இயக்கி இருந்த நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்திருந்தார். எனவே பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ட்ரெண்டானது. இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் புஷ்பா 2 என்று சொல்லப்படும் புஷ்பா தி ரூல் திரைப்படம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்திருந்த ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. அதைத்தொடர்ந்து வெளியான பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இதற்கிடையில் இந்த படம் முதலில் ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் ஒரு சில காரணங்களால் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் சமீபத்திய தகவலின் படி இந்த படத்தினை அறிவித்த தேதிக்கு முன்னரே டிசம்பர் 5ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக தெரியவந்தது. இந்நிலையில் புஷ்பா தி ரூல் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி உலக அளவில் திரைக்கு வருவதாக படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த தகவல் அறிந்த ரசிகர்களும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.