ரஜினியின் தலைவர் 173 பட இயக்குனர் பட்டியலில் மற்றுமொரு இயக்குனரின் பெயர் இணைந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், ரஜினி நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாகப் போவதாகவும் அந்த படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 173 என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் அந்த படத்தை சுந்தர்.சி இயக்க உள்ளார் என்றும் இந்த படம் 2027 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ‘அருணாச்சலம்’ படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து சுந்தர்.சி – ரஜினி இணைய உள்ள தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்தது. ஆனால் அந்த இன்ப அதிர்ச்சி ஒரு சில நாட்களிலேயே பேரதிர்ச்சியாக மாறியது. ஏனென்றால் திடீரென சுந்தர்.சி அறிக்கை ஒன்றை வெளியிட்டு ‘தலைவர் 173’ படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதன் பின்னர் ரஜினிக்கு, சுந்தர்.சி யின் கதை பிடிக்கவில்லை என்பதால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அடுத்தது தலைவர் 173 படத்தின் இயக்குனருக்கான தேடல் நடைபெற்று வருவதாக கமல்ஹாசன் பேட்டியில் கூறியிருந்தார். இருப்பினும் தலைவர் 173 படத்தை இயக்கும் அந்த வாய்ப்பு யாருக்கு கிடைக்கப் போகிறது? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் இருந்து வருகிறது. அதன்படி சமூக வலைதளங்களில் கார்த்திக் சுப்பராஜ், தனுஷ், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. இந்நிலையில் மற்றுமொரு இயக்குனரின் பெயரும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.
அதாவது ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ‘தலைவர் 173’ படத்தை இயக்க வாய்ப்புள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை? என்பதை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.


