இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க நடிகர் சத்யராஜ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, பிறகு ஹீரோவாக உருவெடுத்து புகழ்பெற்றவர் நடிகர் சத்யராஜ். இவர் தற்போது சிறந்த குணசித்திர நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் நடிகர் சத்யராஜ் கடைசியாக சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக வசந்த ரவியுடன் இணைந்து வெப்பன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதற்கிடையில் சத்யராஜ், சினிமா வாழ்க்கையில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பெரியாராகவே கனகச்சிதமாக நடித்து பல்வேறு தரப்பினரிடைய பாராட்டுகளையும் பெற்றிருந்தார். இந்நிலையில் மீண்டும் ஒரு தேசத் தலைவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார் சத்யராஜ். அந்த வகையில் தொடர்ந்து இரண்டு முறை இந்தியாவின் பிரதமராக உள்ள நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நரேந்திர மோடியாக நடிக்க நடிகர் சத்யராஜ் ஒப்பந்தமாகியுள்ளாராம்.
பாலிவுட்டில் தயாராகும் இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளது. பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்க இருப்பதாகவும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.