வித்தியாசமான மற்றும் சிறந்த கதைகளை இயக்குவதில் இயக்குநர் செல்வராகவன் மிகவும் பிரபலம். அவரது இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலணி, ஆயிரத்தில் ஒருவன், நானே வருவேன், மயக்கம் என்ன, காதல் கொண்டேன் உள்ளிட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் அடையாளமாக உள்ளது. இயக்கம் மட்டுமன்றி செல்வராகவன் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
செல்வராகவன் தற்போது நடிகராகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். பீஸ்ட், சாணிக் காயிதம், பகாசுரன் உள்ளிட்ட படங்களில் செல்வராகவன் நன்றாக நடித்திருந்தார். விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க்க ஆண்டனி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, செல்வராகவன் தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு மூவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்திலும் அவர் நடித்துள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ரங்கநாதன் என்பவர் இயக்குகிறார். இந்தப் படம் அரசியல் கதைக் களத்தை மையமாக வைத்து உருவாக இருக்கிறதாம்.
இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் ஒரு படம் இயக்கியிருந்த செல்வராகவன், தற்போது முதல் முறையாக தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் ரவி தேஜா நடிக்கும் இப்படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். படத்தின் மற்ற அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று கூறப்படுகிறது.