செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் செல்வராகவன். காதல், ஆசை ,வேதனை, கோபம் போன்ற உணர்ச்சிகளை ஆழமாகவும், இயல்பாகவும் வெளிப்படுத்தி பல வித்தியாசமான படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் ‘மெண்டல் மனதில்’ எனும் படத்தை இயக்கி வருகிறார். இது தவிர ‘7ஜி ரெயின்போ காலனி 2’ படத்தையும் இயக்குகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அடுத்தது இவருடைய புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களையும் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் நடிப்பதிலும் ஆர்முடைய இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தில் பேயாக நடித்திருந்தார். அடுத்தது வருகின்ற அக்டோபர் மாதம் வெளிவர உள்ள விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நாளை (செப்டம்பர் 7) காலை 11 மணியளவில் செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை வ்யோம் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க டென்னிஸ் மஞ்சுநாத் இந்த படத்தை எழுதி, இயக்குகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.