கூலி திரைப்படத்தை காண மலேசியா, ஆஸ்திரேலியா, கத்தாரிலிருந்து சென்னைக்கு பெரும்திரளாக ரஜினி ரசிகர்கள் படையெடுப்பு.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான கூலி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் படத்தின் முதல் நாள் முதல் காட்சியைக் காண சென்னை ரோகினி திரையரங்கிற்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு உற்சாகமாக திரைப்படத்தைக் காண ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.
சென்னை மட்டுமின்றி மலேசியா ஆஸ்திரேலியா கத்தார் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் கூலி திரைப்படத்தை காண ரஜினி ரசிகர்கள் சென்னை ரோகினி திரையரங்கத்திற்கு வருகை தந்திருந்தனர். அப்போது மலேசியாவிலும் ரஜினிகாந்தின் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் தான் அதிக உற்சாகத்தோடு கொண்டாட முடியும் என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.

கத்தாரில் இருந்து தனது குடும்பத்தோடு கூலி திரைப்படத்தை காண வந்த ரஜினி ரசிகர் கார்த்திக் கூறுகையில், தனது இரு குழந்தைகளுமே ரஜினி படம் பார்த்து தான் வளர்க்கப்பட்டார்கள் என்று கூறினார். தொடர்ந்து ரஜினிகாந்தின் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்தும் மலர் தூவியும் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.