நடிகர் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்திருந்தார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்த இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியான போதிலும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று பல்வேறு விருதுகளை அள்ளியது. ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்த இந்த படத்தின் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. இந்நிலையில் சூர்யா, சுதா கொங்கரா, ஜிவி பிரகாஷ் ஆகியோரின் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. அதன்படி இந்தக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு புறநானூறு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் 43 வது படமான இந்த படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படமானது 1950ல் நடந்த இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து தயாராக உள்ளது. அந்த வகையில் நடிகர் சூர்யா கல்லூரி மாணவனாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, சிதம்பரம், ஹரியானா போன்ற பகுதிகளில் நடைபெற உள்ளது. ஏற்கனவே 2024 பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் இந்த படம் தொடங்க இருப்பதாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இருப்பினும் இப்படம் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் படத்தின் தாமதம் குறித்து நடிகர் சூர்யா, தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “புறநானூறு படத்திற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. இந்த கூட்டணி மிகவும் ஸ்பெஷல் ஆனது. எங்கள் இதயத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கு சிறந்ததை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். விரைவில் படத்தை தொடங்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.