சினிமாவில் கதாபாத்திரம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு இசையும் மிக முக்கியம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இசை என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது இசைஞானி இளையராஜா தான். இவர் தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். இன்றைய இளைஞர்களும் இளையராஜாவின் இசையில் கனெக்ட் ஆகி விடுவார்கள். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை சில படங்களில் அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதனால் இளையராஜா இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக பல தகவல்கள் வெளியானது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. அந்த பாடல்களை படக்குழுவினர் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக கூறி இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு படக்குழுவுக்கு நோட்டீஸும் அனுப்பி இருந்தார். ஆனால் அந்தப் பாடல்களை பயன்படுத்த சட்டபூர்வ உரிமையாளர்களிடமிருந்து அனுமதி பெற்றதாக ‘குட் பேட் அக்லி’ பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் பதிலளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தன்னுடைய அனுமதி இல்லாமல் பாடல்களை பயன்படுத்தியது பதிப்புரிமை சட்டத்திற்கு விரோதமானது. எனவே அதற்கு தடை விதித்து உத்திரவிட வேண்டும் என இளையராஜா மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று (செப்டம்பர் 8) விசாரணைக்கு வந்த நிலையில், ‘இளமை இதோ’, ‘ஒத்த ரூபாய் தாரேன்’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’ ஆகிய மூன்று பாடல்களையும் காப்புரிமை சட்டப்படி ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு பதிலளிக்க வேண்டும் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, இது தொடர்பான அடுத்த விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -