அமரன் படத்திலிருந்து சர்ச்சைக்குள்ளான செல்போன் எண் காட்சி நீக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று அமரன் எனும் திரைப்படம் வெளியானது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராகுல் போஸ், கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை சாய் பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருவரின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது. அதன்படி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் (நேற்று) டிசம்பர் 5 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் சாய் பல்லவி வரும் காட்சி ஒன்றில் மொபைல் எண் காட்டப்பட்டிருந்த நிலையில் அந்த மொபைல் எண் தன்னுடையது என பொறியியல் மாணவர் வாகீசன் என்பவர் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கேட்டிருந்தார். அதாவது படம் வெளியானதிலிருந்து தன்னுடைய மொபைல் எண்ணிற்கு பல அழைப்புகள் வரும் காரணத்தால் தன்னால் படிக்கவோ தூங்கவோ முடியவில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.
அதை தொடர்ந்து இந்த படத்தை ஓடிடியில் வெளியிட தடை செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் அமரன் படத்தில் இடம்பெற்று இருந்த அந்த செல்போன் எண் காட்சி நீக்கப்பட்டு புதிய தணிக்கை சான்று பெறப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.



