டூரிஸ்ட் ஃபேமிலி அபிஷன் நடிக்கும் புதிய படத்தின் கதை குறித்து இயக்குனர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
கடந்த மே மாதம் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி இருந்தார். யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் தொடக்கத்திலேயே இயக்குனராக அறிமுகமான அபிஷன் அருமையான திரைக்கதையை வழங்கி பெயரையும் புகழையும் பெற்றார். அதே சமயம் இந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் அடுத்ததாக அபிஷன், ஹீரோவாக புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இதில் இவருடன் இணைந்து அனஸ்வரா ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை மகேஷ்ராஜின் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சௌந்தர்யா ரஜினிகாந்தின் சியோன் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இயக்குனர் மதன் இந்த படத்தை இயக்க ஷான் ரோல்டன் இதன் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மதன் இப்படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர், “அபிஷன் மற்றும் அனஸ்வராராஜன் ஆகிய இருவருக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் தன்னம்பிக்கை இல்லாத, தெளிவற்ற ஒரு இளைஞன். மறுபக்கத்தில் முழுக்க முழுக்க வெளிப்படையான ஒரு பெண். இவர்களின் கதையை தான் இந்த படம் பேசுகிறது. அபிஷனின் நடிப்பில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மேலும் ‘தண்ணீர் மாத்தான் தினங்கள்’ படத்தில் அனஸ்வராவை பார்த்ததிலிருந்தே அவரை என்னுடைய படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த வாய்ப்பை இந்த படம் தந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.