நடிகை நஸ்ரியா தான் 12 வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் சூர்யா மற்றும் நடிகை நஸ்ரியா நசீம் இணைந்து நடித்துள்ள ‘சீன்’ (Scene) திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட் சமீபத்தில் கேரளாவில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா, “நடிகை நஸ்ரியா என்னுடைய பட வாய்ப்புகளை மூன்று முறை நிராகரித்து விட்டார். இது நான்காவது அட்டெம்ப்ட். இந்த முறை தான் சம்மதம் தெரிவித்தார். கிட்டத்தட்ட 12 வருஷமா தமிழ்ல அவங்க படம் நடிக்கவே இல்ல” என்று ஜாலியாகக் குறிப்பிட்டிருந்தார்.
சூர்யாவின் இந்த கருத்துக்கு மேடையிலேயே சுவாரஸ்யமாக பதில் அளித்துள்ளார் நடிகை நஸ்ரியா. அதன்படி நஸ்ரியா கூறியதாவது, ”கடந்த 12 வருடங்களாக தமிழ் சினிமாவில் நான் தேடிய கதையோ அல்லது எனக்கு ஏற்ற கதாபாத்திரமோ அமையவே இல்லை. அதனால்தான் இந்த 12 ஆண்டுகளில் நான் எந்தத் தமிழ் படத்திலும் நடிக்கவில்லை” என்று வெளிப்படையாகப் பேசினார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ரியா மீண்டும் தமிழ் திரையுலகிற்குத் திரும்புவதும், சூர்யாவுடன் முதன்முறையாக ஜோடி சேர்வதும் சினிமா ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இவர்களது நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
