தேனி மாவட்டத்தில் 53 லட்சம் ரூபாய் டிராக்டர் கடன் மோசடியில் ஈடுபட்ட தனியார் விற்பனை நிலையம். நிதி நிறுவன மேலாளரின் புகாரில் இடைத்தரகர் கைது. 6 டிராக்டர்கள் பறிமுதல்.
தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று டிராக்டர் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இங்கு கடந்தாண்டு கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சரவணன், ஆரோக்கியம், சுருளியப்பன், நாகேந்திரன், அன்புத்துரை, குமார், போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த செந்தில்குமார், மணிகண்டன் ஆகிய 8 நபர்களின் பெயரில் தலா ஒரு டிராக்டர் வீதம் 8 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டது.
இதற்காக தேனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் 8 நபர்களுக்கும் தனித்தனியாக கடன் என மொத்தம் 53 லட்சத்து 34 ஆயிரத்து 485 ரூபாய்க்கு கடனுதவி வழங்கப்பட்டு அந்த தொகை சம்பந்தப்பட்ட விற்பனை நிலையத்தின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட 8 நபர்களின் கணக்கில் இருந்து முதல் தவணை மட்டும் நிதி நிறுவனத்திற்கு செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல மாதங்களாக தவணைத் தொகை செலுத்தாமல் நிலுவையில் இருந்துள்ளது.
இதன் காரணமாக நிலுவையில் உள்ள மாதத் தவணை தொகையை செலுத்துமாறு சம்பந்தப்பட்ட நபர்களிடம் நிதி நிறுவனத்தினர் கேட்ட போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அந்த டிராக்டர்களை யாரும் வாங்க வில்லை எனவும், பிரதமர் மோடி திட்டத்தின் கீழ் ரூபாய் 10,000 முதல் 15,000 வரை நிதியுதவி செய்து தருவதாக கூறி, ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை, டிராக்டர் விற்பனை நிலையத்தில் பணிபுரியும் மேலாளர் பாலமுருகன், விற்பனையாளர் மதன் ஆகியோர் பெற்றதாக கூறியுள்ளனர். மேலும் டிராக்டர்கள் ஏதும் தங்களிடம் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த நிதி நிறுவனத்தினர், மோசடியில் ஈடுபட்ட விற்பனை நிலையத்தினரிடம் விளக்கம் கேட்டதற்கு சரிவர பதில் அளிக்காமல் அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனிடையே குமார், நாகேந்திரன், அன்புத்துரை ஆகியோர் பெயரில் விற்பனையாகி பதிவு செய்யப்பட்ட 3 டிராக்டர்களை நிதி நிறுவனத்தினர் கையகப்படுத்தி நடவடிக்கை எடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து மணிகண்டனின் பெயரில் இருந்த டிராக்டரை கையகப்படுத்தியதில், அதன் இன்ஜின் மற்றும் சேசிஸ் எண்களை வேறொரு வாகனத்தில் மாற்றியமைத்து கொடுத்து மீண்டும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் விற்பனை நிலையத்தினர்.
அது குறித்து விற்பனை நிலையத்தினரிடம் நிதி நிறுவனத்தினர் மீண்டும் கேட்டதற்கு அப்படித் தான் செய்வோம் எனவும், மூதமுள்ள 4 டிராக்டரை கேட்டு தொந்தரவு செய்தால் அதனை உடைத்து விற்று விடுவோம் எனக் கூறியுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட நிதி நிறுவனத்தின் சார்பில் தேனிக் கிளை மேலாளர் வெயில் மாணிக்கம் கடந்த பிப்ரவரி மாதம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே உத்தரவில் விசாரணை நடத்திய தேனி குற்றப்பிரிவு போலீசார், முத்துத்தேவன்பட்டியில் இயங்கும் விற்பனை நிலையத்தின் உரிமையாளர்களான பொம்மையகவுண்டன்பட்டி சந்திரமோகன், நிலக்கோட்டை கார்த்தி, போடியைச் சேர்ந்த சரண்யா, சதீஸ்குமார் மற்றும் மேலாளரான கம்பம் பாலமுருகன், விற்பனை பிரதிநிதியான நாரயணத்தேவன்பட்டியை சேர்ந்த மதன் ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் மோசடி குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டிருந்த குற்றப்பிரிவு போலீசார் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்த ராஜாங்கம் என்பவரை கைது செய்தனர். பழைய வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் இடைத்தரகரான அவரிடம் நடத்திய விசாரணையில், விற்பனை நிறுவனத்தின் உரிமையாளரான சந்திர மோகன் மற்றும் கம்பத்தை சேர்ந்த டிராக்டர் மெக்கானிக், லோகேந்திரன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து பணத்திற்காக இது போன்ற மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
புகாரில் கூறப்பட்டுள்ள நிதி நிறுவனம் மட்டுமின்றி வெவ்வேறு நிதி நிறுவனங்களிலும் இது போன்ற மோசடி செயல்களில் ஈடுபட்டு புதிய வாகனங்களை வாங்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
அவ்வாறு மோசடி செய்த வாகனங்களில் சிலவற்றை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல நபர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அவரிடம் இருந்து 1 டிராக்டரும், அவர் அளித்த தகவலில் வெவ்வேறு இடங்களில் இருந்து மேலும் 5 டிராக்டர் என 6 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பின் கைது செய்யப்பட்ட ராஜாங்கத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிராக்டர்களை விற்பனை செய்ததாக கூறி விற்பனை நிலையத்தினர் கடன் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.