சென்னை, காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைப்பதாக கூறி கட்டுப்பாட்டறைக்கு மிரட்டல் விடுத்த நபர் கைது.கடந்த 05.07.2025 அன்று மாலை, சென்னை பெருநகர காவல், கிழக்குமண்டல காவல் கட்டுப்பாட்டறையின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய நபர் ஒருவர், சென்னை, மயிலாப்பூர், தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து எல்லோரையும் காலி செய்து விடுவதாக கூறி மிரட்டியும், அவதூறாக பேசியும் இணைப்பை துண்டித்துள்ளார். இது குறித்து D-5 மெரினா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
D-5 மெரினா காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, மானாமதுரை தாலுகா, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தவசிலிங்கம் என்பவரை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தவசிலிங்கம் விசாரணைக்குப் பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
