மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸில் ஈடுபட்டதாக 5 ஆட்டோ ஓட்டுனர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா். ஆட்டோ ரேஸின் போது இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலியான சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியான நிலையில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு 3 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனா்.
மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் அவ்வபோது இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் சாகசங்களில் ஈடுபடுவதும், பைக் ரேஸ் செல்வதும் வாடிக்கையாக உள்ளது.
கடந்த 15ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அருமந்தை பகுதியில் அதிகாலை நேரத்தில் முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மீது 3 இருசக்கர வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய விபத்தில் குன்றத்தூரை சேர்ந்த மணி, அம்பத்தூர் சேர்ந்த ஷாம்சுந்தர் ஆகிய இருவர் உயிரிழந்த நிலையில் பெசன்ட் நகரை சேர்ந்த மோகனகிருஷ்ணன், கண்ணகி நகரை சேர்ந்த மாரிமுத்து, பூவிருந்தவல்லியை சேர்ந்த ஜுபேயர் ஆகிய மூவர் படுகாயமடைந்துள்ளனா்.
இது குறித்து தகவலறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஆட்டோ ரேஸ் நடந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது தொடர்பாக வீடியோ வெளியான நிலையில் வழக்கின் பிரிவுகளை மாற்றி செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
செல்போன் வீடியோ காட்சிகள், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட 5 ஆட்டோ ஓட்டுனர்கள் உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனா்.
முகப்பேரை சேர்ந்த சந்துரு (38), கொளத்தூரை சேர்ந்த மதி (43), ரமேஷ் (32), ஜாய்சன் (31) பெரம்பூரை சேர்ந்த ராஜசேகர் (35), ஆவடியை சேர்ந்த கௌதம் (24), அண்ணா நகரை சேர்ந்த பிரேம்குமார் (33) ஆகிய 7பேர் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், பொதுமக்களை அச்சுறுத்துதல், அபாயகரமாக வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆட்டோ ரேஸில் பயன்படுத்திய 3 ஆட்டோக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனா்.
காவல்துறையினரின் தடையை மீறி பைக், ஆட்டோ ரேஸில் ஈடுபட்டாலோ, சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை இயக்கினாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.