தெருக்களில் நடந்து செல்லும் இளம்பெண்களை குறி த்து பாலியல் சீண்டலில் ஈடுபடும் வாலிபர் கைது செய்யப்பட்டாா். நூதன முறையில் சிசிடிவி ஆய்வு செய்து காவல்துறையினா் கைது செய்தனர்.சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவி ஒருவர் ஆலந்தூரில் உள்ள கண் மருத்துவமனையில் 2-ம் ஆண்டு லேப் டெக்னிஷியன் படித்து வருகிறார். இவர் கடந்த 25-ஆம் தேதி அன்று கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்ல நொளம்பூர், வேணுகோபால் தெருவில் நடந்து சென்றுள்ளாா். அப்போது பின்னால் பைக்கில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத ஒருவர், கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு விட்டு, தப்பி ஓடி விட்டார். அதிர்ச்சியடைந்த அந்த மாணவி இது குறித்து, நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் மாணவி கொடுத்த அடையாளங்களை வைத்து அந்த நபர் யார் என்பதனை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் சம்பவம் நடந்த நொளம்பூர் வேணுகோபால் தெருவில், அதனை சுற்றி உள்ள தெருக்கள் என 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதாவது அந்த நபர் தப்பிச் சென்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. இதனால் போலீசார் சாதுர்யமாக செயல்பட்டு, அந்த நபர் வந்த வழியின் பின்னோக்கி செல்லும் தெருக்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அம்பத்தூரை அடுத்த மண்ணூர்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அந்த நபர் மது அருந்தி விட்டு ஜிபே மூலம் பணம் செலுத்தியதை, சிசிடிவி மூலம் போலீசார் கண்டுபிடித்தனர். இதன் பிறகு பணம் வந்த ஜிபே எண்ணை வைத்து போலீசாரால், அந்த நபர் நீலாங்கரை பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று கைது செய்தனர். விசாரணையில் அவர் நீலாங்கரை பகுதியைச் சேர்ந்த சரத்பாபு (31) என்பது தெரிய வந்தது. இவருக்கு இதுவரை திருமணமாகவில்லை. இதனால் சாலையில் நடந்து செல்லும் இளம் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
“மது குடித்து விட்டு பிறகு, ஆட்கள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் அழகான இளம்பெண் நடந்து சென்றால் பின் தொடர்ந்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டு விட்டு சிற்றின்பம் அனுபவிப்பேன்” என்று கைதான சரத்பாபு வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான சரத்பாபு ஏற்கெனவே எழும்பூர் பகுதியில் இதே போல இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கைதாகி சிறைக்கு சென்று வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்ற சம்பவத்திற்கு சரத்பாபு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். சரத்பாபு தனியார் வங்கியில் கலெக்சன் ஏஜெண்டாக வேலை செய்து வந்துள்ளார். கைது செய்யப்பட்ட சரத்பாபு விசாரணைக்குப் பின்னர் நொளம்பூர் போலீசார் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சாதி வாரிய கணக்கெடுப்பு:பாமகவிற்கு கிடைத்த வெற்றி – அன்புமணி!