நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருளை கடத்த முயன்ற இந்து மக்கள் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.


நாகப்பட்டினத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேசிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வருகை தந்து ரகசியமாக பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வேளாங்கண்ணி கார் நிறுத்தம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

இதில் அவர்கள் மெஸ்கலின் (Mescaline) என்ற போதைப் பொருள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் படகு மூலம் இலங்கைக்கு மெஸ்கலின் கடத்த இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. பிடிபட்ட மெஸ்கலின் போதைப் பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.6 கோடி என கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 2 கிலோ மெஸ்கலின் (Mescaline) போதைப் பொருளை தேசிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர்கள் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் புதிய நம்பியார் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் (40), மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சுனாமி குடியிருப்பு மீனவர் காலனியை சேர்ந்த ஆனந்தராஜ் (33), நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தும்மாச்சி பகுதியை சேர்ந்த முருகன் (எ) காஞ்சிநாதன் (31) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும், கைதான ரவிச்சந்திரன், இந்து மக்கள் கட்சியின் நாகப்பட்டினம் வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளதும் தெரியவந்தது. இதனை அடுத்து, ரவிச்சந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் தேசிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து மூன்று பேரையும் நாகப்பட்டினம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் வீட்டில் ஆஜர் படுத்தி, மேல்விசாரணைக்காக சென்னை அழைத்து சென்றனர்.


