அபுதாபி, துபாய் நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட, ரூ. 2.08 கோடி மதிப்புடைய 3.4 கிலோ தங்கம், ஐ ஃபோன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், மின்னணு சாதனங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு பயணிகளை, சுங்கத்துறை கைது செய்து விசாரணை.
துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த 4 ஆண் பயணிகள் ஒரு குழுவாக, சுற்றுலா பயணிகள் விசாவில் அபுதாபிக்கு சென்று விட்டு, துபாய் வழியாக இந்த விமானத்தில் சென்னை திரும்பி வந்தனர். சுங்க அதிகாரிகளுக்கு அவர்கள் 4 பேர் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர்.
அதன்பின்பு அவர்களுடைய சூட்கேஸ்கள், பைகள் போன்ற உடைமைகளை சோதனை இட்டனர். அதற்குள் மறைத்து வைத்திருந்த செல்போன்கள், ஐபோன்கள், மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள், மின்னணு சாதனங்கள் ஆகியவைகள் பெருமளவு இருந்தன. அவைகளின் மொத்த மதிப்பு ரூ. 25 லட்சம். சுங்க அதிகாரிகள் அவைகளை பறிமுதல் செய்தனர்.
இதை அடுத்து அந்த 4 பயணிகளும், நாங்கள் கொண்டு வந்த அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்து விட்டீர்கள். இனிமேல் எங்களை யாவது, வெளியில் போக அனுமதிப்பீர்களா? என்று சுங்க அதிகாரிகளிடம் அலட்சியமாக பேசினார். இது சுங்கத்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதை அடுத்து அவர்கள் 4 பேரையும் தனி அறைக்கு அழைத்து சென்று, முழுமையாக பரிசோதித்தனர். அப்போது அவர்களின், உள்ளாடைகளுக்குள், சிறு சிறு பார்சல்களாக மொத்தம் பத்து பார்சல்கள் மறைத்து வைத்திருந்தனர். அவைகளை எடுத்து பிரித்துப் பார்த்தபோது, அவைகளில் தங்கப் பசைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். 4 பேரிடம் இருந்து 3. 4 கிலோ தங்கப் பசையை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.1. 83 கோடி.
இதை அடுத்து சுங்க அதிகாரிகள் தங்கப் பசைகளை பறிமுதல் செய்து, கடத்தல் ஆசாமிகள் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தங்கம், ஐபோன், செல்போன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் போன்றவைகள் மொத்தம் ரூ.2.08 கோடி மதிப்புடையவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கைதான 4 பேரிடமும் சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.