Homeசெய்திகள்க்ரைம்குழந்தையின் கழுத்தை பிளேடால் கிழித்த தந்தை கைது

குழந்தையின் கழுத்தை பிளேடால் கிழித்த தந்தை கைது

-

குழந்தையின் கழுத்தை பிளேடால் கிழித்த தந்தை கைது

வேலூர் அருகே, குழந்தை தன் சாயலில் இல்லை என மனைவியை சந்தேகப்பட்டு பிறந்து 26 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கழுத்து மற்றும் கைகளை பிளேடால் கிழித்த விமானப்படை ஊழியரை அணைக்கட்டு போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த தேவிசெட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் தாம்பரம் இந்திய விமானப்படை தளத்தில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஹேமலதா (21). கர்ப்பமாக இருந்த ஹேமலதாவுக்கு கடந்த 26 நாட்களுக்கு முன்பு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை உடன் தாய் ஹேமலதா ரெட்டியூரில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்தார்.

இந்நிலையில் மணிகண்டன் நேற்று  குழந்தையை பார்க்க ரெட்டியூரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்தார். குழந்தை தன் சாயலில் இல்லை என்று மனைவியின் மீது சந்தேகப்பட்டு ஆபாச வார்த்தைகளால் ஹேமலதாவை திட்டியும் தரக்குறைவாக பேசியும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மணிகண்டனுக்கும், ஹேமலதாவுக்கும் வாக்குவாதம் முற்றி உள்ளது. மணிகண்டன் அருகில் இருந்த 26 நாட்களே ஆன ஆண் குழந்தையை பக்கத்தில் இருந்த பிளேடால் கழுத்து மற்றும் கை பகுதிகளில்  அறுத்துள்ளார்.

குழந்தையின் கழுத்தை பிளேடால் கிழித்த தந்தை கைது
கைதான மணிகண்டன்

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த குழந்தையை உறவினர்கள் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அங்கே முதல் உதவி சிகிச்சை அளித்த பின்பு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அந்தக் குழந்தை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து மணிகண்டன் தலைமறைவாகிவிட்ட நிலையில், இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய குழந்தையின் தந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  போலீசார் மணிகண்டனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து, சென்னை தாம்பரத்தில் பதுங்கி இருந்த குழந்தையின் தந்தை மணிகண்டனை அணைக்கட்டு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

26 நாட்களே ஆன ஆண் குழந்தையை குழந்தையின் தந்தையே சந்தேகப்பட்டு பிளேடால் கழுத்தை அறுத்த சம்பவம் அணைக்கட்டுப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ