போலி ஆவணம் தயாரித்து அரசை ஏமாற்றி நிலத்தை விற்று ரூ.1 கோடி பெற்று மோசடி செய்தவருக்கு 11 ஆண்டு சிறை தண்டனையும், ஓய்வுபெற்ற பெண் தாசில்தார், ஆர்ஐக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாரூர் கோர்ட் உத்தரவிட்டது.
திருவாரூர் தாலுகா அடியக்கமங்கலத்தை சேர்ந்தவர் ஹெரிபா ராபியத்துல் பதரியா. இவர், தற்போது மலேசியா நாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அடியக்கமங்கலம் கிராமத்தில் உள்ள வீட்டுமனை மற்றும் விவசாய நிலங்களை கவனித்து கொள்வதற்காக சென்னையை சேர்ந்த பாரூக் அகமது(60) என்பவருக்கு, ஹெரிபா ராபியத்துல் பதரியா பவர் பத்திரம் எழுதி கொடுத்திருந்தார்.
கடந்த 2012-ம் ஆண்டு தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுக்கும் பணியின் போது, பதரியாவுக்கு சொந்தமான அதே நேரத்தில் பவர்பத்திரத்தில் பதரியா குறிப்பிடாத நிலங்களுக்கும் போலி ஆவணம், பவர் பத்திரம் தயார் செய்து அதனை தேசிய நெடுஞ்சாலை துறையினருக்கு பாரூக் அகமது கொடுத்துள்ளார். இதன் மூலம் ரூ.1 கோடி பணம் பெற்றதாக கூறப்படுகிறது. போலி ஆவணம் தயார் செய்து தொகை பெற்றதற்கு, அப்போது நெடுஞ்சாலைத்துறை தனித்தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஞானசுந்தரி(63) மற்றும் ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளராக ராஜேந்திரன் (67) உடந்தையாக இருந்துள்ளனர்.

இது தொடர்பாக நிலத்தின் உரிமையாளர் ஹெரிபா ராபியத்துல் பதரியா, திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த 2021 பிப்ரவரி மாதம் புகார் மனு அளித்தார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த புகார் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன்படி சிபிசிஐடி போலீசார் அகமதுபாரூக் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். திருவாரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி லதா, குற்றம் சாட்டப்பட்ட பாரூக் அகமதுக்கு போலி ஆவணம் தயார் செய்தது, அரசை ஏமாற்றி ரூ.1 கோடி பெற்றது போன்ற குற்ற செயல்களுக்காக 11 ஆண்டு சிறை தண்டனையும், ஓய்வு பெற்ற தாசில்தார் ஞானசுந்தரி மற்றும் வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரனுக்கு தலா ஓராண்டு சிறையும் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளாா்.
வருமானம் ரூ.8 லட்சம்: கட்டணம் ரூ.1 கோடி: EWS சான்றிதழின் நம்பகத்தன்மை கேள்விக்குறி


