திருவள்ளூர் அருகே பியூட்டி பார்லர் பெண் உரிமையாளரிடம் போலியான தங்க பிஸ்கட்டை கொடுத்து 10 லட்சம் மோசடி செய்ய முயன்ற ஆந்திரா பகுதியைச் சேர்ந்த அக்கா தம்பி இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகே சரண்யா என்பவர் சபயர் பியூட்டி லான்ச் என்ற பெயரில் பியூட்டி பார்லர் கடந்த 3 மதமாக நடத்தி வருகிறார். இவர் பியூட்டி பார்லருக்கு கடந்த மார்ச் 20-ந் தேதி காலை 10.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் தாங்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்றும், தனது பெயர் லட்சுமி தன்னுடன் வந்தவர் தனது தம்பி ரவிக்குமாரர் எனவும் அறிமுகம் செய்து கொண்டு லட்சுமி பேஸியல் செய்துள்ளார்.
அதன்பின் மறுபடியும் அவர்கள் கடைக்கு வாரத்திற்கு ஒரு நாள் என வந்து சரண்யாவிடம் நைசாக பேச்சு கொடுத்து தாங்கள் ரோடு வேலை செய்து வருவதாகவும் அப்போது தங்களுக்கு தங்க கட்டி கிடைத்துள்ளதாகவும் அது சுமார் 430 கிராம் உள்ளதாகவும் தாங்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளதாகவும் தங்களுக்கு 10 இலட்சம் கொடுத்தால் போதும் என கூறி, சரண்யாவிடம் பேரம் பேசி உள்ளனர்.
அண்ணனிடம் கேட்டு வருவதாக சொல்லி வாதிக்கு சொல்போனில் தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை சொல்ல அவர் அவர்களை நாளை என்னிடம் பேச சொல் நான் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லி அனுப்பி வைத்துள்ளார். அடுத்த நாள் வந்து தாங்கள் கொண்டு வந்த தங்க கட்டி போன்ற பிஸ்கட்டில் வெட்டி எடுக்கப்பட்ட பீஸ் இது இதனை நீங்கள் சோதனை செய்து கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளனர். அந்த தங்க பீஸை அருகில் உள்ள கடையில் சோதனை செய்தபோது அது ஒரிஜினல் தங்கம் என சொல்லியதால், தாங்கள் பணத்தை தயார் செய்து விட்டு இரண்டு நாளில் வாங்கி கொள்வதாக சரண்யா அனுப்பி வைத்துள்ளார்.
தம்பி உறவு முறையான இர்பான் என்பவரிடம் கூறியதால், இர்பான் அது ஏமாற்று கும்பல் என்பதை ஏற்கெனவே அவர் அறிந்துள்ளார். இதனால் இர்பான் தனது நண்பர்களுடன், நேற்று அவர்கள் தங்க கட்டியை கொண்டுவர சொல்லி சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்த இருவரையும் டிஎஸ்பி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனா். போலீசார் அவர்களிடமிருந்து 1/2 கிலோ தங்க மூலம் பூசப்பட்ட பித்தளையை கைப்பற்றியதுடன், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனா்.
நூதன மோசடியில் ஈடுபட்ட லட்சுமி மற்றும் அவரது தம்பி ரவி ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்தவா்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இவர்களுக்கு மூளையாக மதுரை பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் செயல்பட்டு வருவதாகவும், இவர் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே இது போன்ற நூதன மோசடியில் இவர்கள் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இவர்கள் இதற்கு முன் தமிழகத்தில் பிற பகுதியில் மோசடியில் ஈடுபட்டு சிறைக்கு சென்றவா்கள் என்பது தெரியவந்துள்ளது. வறுமையில் இருப்பவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கமிஷன் பணம் தருவதாக கூறி, களத்தில் இறக்கி விடப்பட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் அருகே பியூட்டி பார்லர் பெண் உரிமையாளர்கள் போலி தங்க பிஸ்கட்டை கொடுத்து 10 லட்சம் மோசடி செய்ய முயன்ற அக்கா தம்பி இருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.