தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்த மூதாட்டியின் உடலில் இருந்து 4 பவுன் தங்க செயினை திருடி சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பதிவான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள எஸ் எஸ்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மனைவி கமலம் 82 வயதான மூதாட்டி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு கொண்டு வரும் வழியிலேயே மூதாட்டி உயிரிழந்தார்.
இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவு 802 வது அறையில் பரிசோதித்த மருத்துவர்கள் மூதாட்டி உயிரிழந்ததாக தெரிவித்தனர். அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த மூதாட்டியின் உடலில் இருந்த 4 பவுன் தங்க செயின் திருடு போனது . இதையடுத்து உடலில் இருந்த செயின் காணாமல் போனதையறிந்து அதிர்ச்சி அடைந்த கமலம் என்பவரின் மருமகன் ரவிச்சந்திரன் கானாவிலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிகிச்சை அறையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது பெண் ஒருவர் மூதாட்டியின் இறந்த உடலில் இருந்து தங்கசெயினை திருடி சென்றது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த பெண் யார் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் உறவினரின் சிகிச்சைக்காக வந்த தேனி வளையப்பட்டி பகுதியை சேர்ந்த நந்தினி என்பது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாகி இருந்த நந்தினி என்ற அந்த பெண்ணை கானாவிலக்கு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இறந்த மூதாட்டியின் உடலில் இருந்து தங்கசெயினை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிகிச்சை அறையில் இருந்தே துணிகரமாக திருடிசென்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
யூட்யூபில் பார்த்து மாடுகளை வாங்க ஆர்டர் : ஆன்லைனில் பணம் செலுத்தி ஏமாந்த விவசாயி..!