ஆட்டோக்களை மட்டும் குறிவைத்து திருடும் திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை அயனாவரம் சாலை மெயின் தெருவில் வசித்து வரும் 60 வயது முதியவர் துளசி ஆட்டோ ஓட்டி வருகிறார். துளசி கடந்த 26 ஆம் தேதி அன்று இரவு தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாமிபத்தன் தெரு மற்றும் மேடவாக்கம் டேங்க் ரோடு சந்திப்பில் விநாயகர் கோயில் அருகே வழக்கமாக ஆட்டோ நிறுத்தும் இடத்தில் அவரது ஆட்டோவை நிறுத்திவிட்டு மறுநாள் காலை வந்து பார்த்தார்.
அவரது ஆட்டோ திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து துளசி அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அயனாவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து ஆட்டோவை திருடிச் சென்ற ஓட்டேரியைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் பிரேம் ஆனந்த் ஆட்டோவை திருடியதும், இதே போல, ஏப்ரல் 22 இரவு, ஓட்டேரி, பாலாஜி மருத்துவமனை அருகில் ரமேஷ் என்பவர் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடிச் சென்றதும் தெரியவந்தது. அதன்பேரில், 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிரேம் ஆனந்த் மீது ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கு உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பிரேம் ஆனந்த் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.