ஐதராபாத்தில் கார் எரிந்து இருவர் உயிரிழந்த சம்பவம் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல். வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள் காதலை பெற்றோர் ஏற்காதது, பெண்ணின் உறவினர் காதல் விவகாரம் வீட்டில் சொல்வதாக கூறி பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததால் தற்கொலை செய்து கொண்டது அம்பலம்.
தெலுங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் கன்பூர் சர்வீஸ் சாலையில் காரில் தீ பிடித்து கொண்டதில் கார் முழுவதும் தீயில் எரிந்து ஒரு பெண் இளைஞர் உடல் கருகி இறந்தனர். முதலில் இதனை மின்கசிவு காரணமாக கார் தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என கருதிய போலீசார் விசாரணையில் பல அடுத்தடுத்து உண்மைகளை தெரிந்து கொண்டனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்
தெலுங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மண்டலம் பிள்ளையப்பள்ளியைச் சேர்ந்த பர்வதம் – ஆஞ்சநேயுலு தம்பதியினர் குடும்பத்துடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே மாவட்டம் பீபிநகர் மண்டலம் ஜமீலாபேட்டைக்கு வந்தனர். காட்கேசர் மண்டலம் நாரப்பள்ளியில் ஆஞ்சநேயுலு மகன் ஸ்ரீராமுலு (25) என்பவர் மொத்த சைக்கிள் கடை நடத்தி வருகிறார். ஸ்ரீ ராமுலு அதே பகுதியை சேர்ந்த மைனர் சிறுமி (17) பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சாதிகள் என்பதால் இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததும், பலமுறை கண்டித்தும் தாக்கியுள்ளனர்.
சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும் காதலர்கள் அவ்வப்போது பேசிக் கொள்வது வழக்கம். இந்த நிலையில், சிறுமியின் நெருங்கிய உறவினரான சிண்டு இவர்களது காதல் விவகாரம் அறிந்ததும் அவர்களை மிரட்டி வந்துள்ளார். பணம் தரும்படியும் இல்லாவிட்டால் காதல் விவகாரத்தை பெற்றோரிடம் கூறிவிடுவதாக மிரட்டி வந்துள்ளார். இதனால் பயந்துபோன ஸ்ரீராமுலு பல தவணைகளில் ₹1.35 லட்சம் கொடுத்தார்.
இருப்பினும் அதிக பணம் தருமாறு சிண்டுவிடம் இருந்து அழுத்தம் அதிகரித்தது . திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காதது, மறுபுறம் சிண்டு பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த காதலர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதற்காக ஸ்ரீராமுலு திங்கள்கிழமை மெடிப்பள்ளியில் உள்ள செல்ஃப் டிரைவ் நிறுவனத்தில் ஒரு காரை வாடகைக்கு எடுத்துள்ளார். அவர்கள் திட்டமிட்டபடி மைனர் சிறுமி ஒரு இடத்தை அடைந்ததும் கன்பூரில் உள்ள புறநகர் சுற்றுச்சாலையின் சர்வீஸ் ரோட்டில் காரில் இருவரும் சென்று ஒரு ஓரத்தில் காரை நிறுத்தினர். பின்னர் ஏற்கனவே திட்டமிட்டு வாங்கி வந்த வந்த பெட்ரோலை உடலில் இருவரும் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரனையில் தெரிய வந்தது. இதில் காரில் தீப்பற்றி எரிவதைத் தாங்க முடியாமல் கீழே இறங்கிய ஸ்ரீராமுலு, சத்தம் போட்டு அலறியடித்துக் கொண்டு நடைபாதையில் கீழே விழுந்தார். சிறுமி காரில் சீட் பெல்ட் அணிந்து சிக்கி உடல் முழுவதும் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்தார்.
மாலை 6.30 மணியளவில் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் இதைக் கண்டு காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வாகனம் வருவதற்குள் காருடன் மைனர் சிறுமி முழுவதும் எரிந்து அடையாளம் தெரியாத வகையில் எலும்புகூடாக மாறியது. ஸ்ரீராமுலு சாலையில் நடைபாதையிலேயே துடிதுடித்து இறந்தார். இதனை அறிந்த செல்ப் டிரைவ் நிறுவன பிரதிநிதிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்ரீராமுலுவின் கார் வாடகை விவரங்களை போலீசாரிடம் தெரிவித்தனர்.
அதில் உள்ள செல்போன் எண்ணை வைத்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீராமுலுவின் பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கள் மகன் தங்களிடம் தனது காதலை கூறியதாகவும், சம்பவத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தற்கொலை கடிதம் அனுப்பியதாகவும் கடிதம் ஒன்றை காட்டியுள்ளனர். இதனையடுத்து போலீசார் தடயவியல் ஆய்வகத்திற்கு காரில் இருந்த மாதிரிகளை எடுத்துச் சென்று இருவரின் உடல்களையும் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மறுபுறம் மைனர் சிறுமியின் பெற்றோர் காதல் விவகாரம் வைத்து பணம் கேட்டு மிரட்டிய சிண்டு வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது சிண்டு இல்லாததால் அவரது தந்தையை தாக்கினர். இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் தீ பிடித்து எரிந்த சம்பவத்தில் போலீசார் விசாரணையில் தகவல் தெரியவந்தால் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.