தனியார் மருத்துவமனையில் உரிமையாளருக்கு தெரியாமல் 52 லட்சம் ரூபாய் கையாடல் செய்த இளம் பெண் கைது
சென்னை அண்ணா நகர், மெட்ரோ சோன் குடியிருப்பைச் சேர்ந்தவர் மருத்துவர் மைதிலி. அவரது கணவருடன் மேற்கு அண்ணா நகர், ஆபீசர் காலனியில் ‘ஆஷாரா’ என்ற பெயர் மருத்துவமனை நடத்தி வருகின்றனர். 2021 ல், திருவாரூர் மாவட்டம், குடவாசலைச் சேர்ந்த சௌமியா என்பவரை பில்லிங் மற்றும் கேஷியராக பணியில் சேர்த்த நிலையில் அவர், பணியில் நம்பிக்கைக்கு உரியவராக நடந்ததால், மருத்துவமனை வரவு செலவு கணக்கை கவனிக்க பொறுப்பு அளித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மே மாதம் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், பில் தொகையை பணமாக கட்ட சொல்லி சௌமியா வற்புறுத்துவதாக புகார் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த மைதிலி பில்லிங் கணக்குகளை சரி பார்த்தபோது, சௌமியா, பணத்தை கையாடல் செய்தது தெரிந்தது. தொடர்ந்து சோதனை செய்ததில் கடந்த பிப்ரவரி மாதம் முதல், நோயாளிகளிடம் பணத்தை பெற்றுக் கொண்டு, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு வாயிலாக பணம் பெற்றதாக வரவு செலவு கணக்கில் எழுதியுள்ளார்.
மேலும், மருத்துவமனை ‘கியூ ஆர்’ கோட்’ வேலை செய்யவில்லை என கூறி, தனது வங்கியின் ‘கியூ ஆர்’ கோட்’ வாயிலாக பணத்தை பெற்று, ரெஜிஸ்டரில், நோயாளிகள் விவரங்கள் அழித்தது தெரிய வந்துள்ளது. பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை, வரவு செலவு கணக்கை சரிபார்த்த போது, 52.24 லட்சம் ரூபாய் சௌமியா கையாடல் செய்தது கண்டு அதிர்ச்சியடைந்த மைதிலி மோசடியில் ஈடுபட்ட செளமியா மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரக குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ஆய்வாளர் ரேகா, தலைமறைவாக இருந்த சென்னை கண்ணம்மாபேட்டை, சி.ஐ.டி நகரைச் சேர்ந்த சௌமியாவை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மீனம்பாக்கம் மேம்பாலத்தில் சொகுசு கார் கவிழ்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்!