நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பொறியியல் கல்லூரியில் உணவு உட்கொண்ட 400 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு, உடல்நலம் பாதிப்படைந்தது. இது குறித்து கல்லூரி செயல் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளாா்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கல்வி நிறுவனத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்று வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லூரி விடுதியில் உணவு உட்கொண்ட பொறியியல் மாணவ மாணவியர்கள் 400 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து கல்லூரி உணவு கூடத்திற்கு சீல் வைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நவம்பர் 2 ஆம் தேதி வரை கல்லூரி விடுமுறை விடப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து கல்லூரியின் செயல் அலுவலர் பொம்மண்ண ராஜா பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கடந்த 27, 28 ஆகிய இரு நாட்களில் உணவு உட்கொண்ட மாணவா்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பி உள்ளனர். மாணவர்கள் வீட்டிற்கு சென்றதும், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து, அவா்களது பெற்றோரிடம் கேட்டு மாணவா்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொண்டோம்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக நாமக்கல் மாவட்டம் நியமன அலுவலர் மருத்துவர் தங்க விக்னேஷ் தலைமையில் உணவு பாதுகாப்புத் துறையினர் கல்லூரி விடுதிக்குள் அமைந்துள்ள கல்லூரி உணவ இருப்பு அறை, உணவு பரிமாறு கூடம், மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து ஆய்வு முடிவுகள் குறித்து தெரிவிப்பார்கள். அரசு அதிகாரிகளும் உணவு கூடம் பராமரிப்பு பணியாளர்கள் செயல்பாடு குறித்தும் சில அறிவுரைகளை எங்களுக்கு வழங்கியுள்ளார்கள். அதன் பொருட்டு மேற்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக எங்கள் கல்லூரி வளாகத்திற்குள் எவ்விதமான அசாதாரண சூழ்நிலையும் ஏற்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என எக்செல் கல்லூரி நிர்வாக செயல் உறுப்பினர் பொம்மண்ணா ராஜா“ கூறியுள்ளார்.
“ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே எனது கனவு“ – தடகள வீராங்கனை எட்வினா ஜேசன்


