பொன்னேரி அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் மூழ்கியதால் இரு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆற்றை கடக்க காத்திருந்தவர்களை பேரிடர் மீட்பு படையினர் கயிறு கட்டி மறுகரைக்கு அழைத்து சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் மூழ்கியது. அதனால் இரு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆந்திராவில் பெய்த கனமழையால் பூண்டி ஏரிக்கு அதிகளவில் நீர்வரத்து வந்ததால் நேற்று காலை பூண்டி ஏரியில் இருந்து 10000கனஅடி உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சீமாவரத்தில் உள்ள கடைசி தடுப்பணையும் நிரம்பியது. சீமாவரம் தடுப்பணையில் இருந்து செல்லும் வெள்ள நீர் சுப்பாரெட்டிப்பாளையம், பள்ளிபுரம் கிராமங்களுக்கு செல்லும் தரைப்பாலத்தை மூழகடித்து செல்கிறது. இந்த இரண்டு கிராம மக்களுக்கும் முக்கிய சாலையாக உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்பட்டு வந்த உபரிநீர் 7500கனஅடியாக உள்ளதாலும் திருவள்ளூர் மாவட்டத்தில் காலையில் இருந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்றில் வெள்ள பெருக்கின் வேகம் குறையவில்லை. இதனை தொடர்ந்து சுப்பாரெட்டிப்பாளையம், பள்ளிபுரம் கிராமங்களில் உள்ள மக்கள் தரைப்பாலத்தில் செல்லாதவாறு காவல்துறையினர் தடுப்புகளை அமைத்துள்ளனர். பொதுமக்களின் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில் ஆற்றை கடக்க வருவாய்த்துறை சார்பில் தற்காலிகமாக படகு வசதி செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் காலையில் ஊரில் இருந்து பள்ளி மற்றும் அலுவலகம் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி செல்ல காத்திருந்தவர்களை மாநில பேரிடர் மீட்பு படையினர் கயிறு கட்டி பாதுகாப்பாக மறுகரைக்கு அழைத்து சென்றனர்.

தொடர்ந்து பணிக்கும், பள்ளிக்கும் சென்று ஊருக்கு திரும்புபவர்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் உதவி வருகின்றனர். ஆற்றில் செல்லும் தண்ணீரின் வேகம் குறைந்ததும் வழக்கம் போல மக்கள் தரைப்பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீரின் வேகம் மேலும் அதிகரித்தால் ஒருகரையில் இருந்து மறுகரைக்கு பொதுமக்கள் செல்வதற்கு படகு போக்குவரத்து துவங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளப் பெருக்கு குறையும் வரை பேரிடர் மீட்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.