திருவள்ளூரில் புறநோயாளியாக சென்றவருக்கு தவறான சிகிச்சை அளித்தால் ஒருவர் மரணம் – மருத்துவமனை மீது புகார்!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் தனியார் மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சையால் ஒருவர் மரணமடைந்ததாக அவரின் உறவினர்கள் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பொன்னேரி அருகே உள்ள பாக்கம் கிராமத்தை சேர்ந்த சமையல் கலைஞர் அருள்தாஸ், இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அருள்தாசு தன்னுடைய காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற சோழவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அருள்தாசுக்கு மருத்துவர் சிகிச்சை அளித்தபின் மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அருள்தாஸ் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் அருள்தாசின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தனியார் மருத்துவமனையில் மருத்துவர் அளித்த தவறான சிகிச்சை காரணமாகவே உயிரிழந்ததாகக் கூறி அருள்தாசின் மனைவி, மற்றும் உறவினர்கள், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நீதிகேட்டு முற்றுகையிட்டனர்.