ஒரு லிட்டர் பாலுக்கு 7 ரூபாய் உயர்த்தி வழங்கவில்லை என்றால் ஆவின் நிறுவனத்துக்கு பால் வினியோகம் நிறுத்தப்படும் என பால் உற்பத்தியாளர்கள் அறிவித்து அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் குறித்தும், அந்தத்துறை குறித்தும் நிறைய சர்ச்சைகள், விவாதங்கள் வந்துக் கொண்டே இருக்கிறது. ஆவின் பால் வினியோகத்தில் குளறுபடி, நுகர்வோர்களுக்கு சரியான நேரத்தில் பால் கிடைக்காமல் தவிப்பு, ஆவினுக்கு பால் கொடுக்கும் உற்பத்தியாளர்கள் போராட்டம் என்று ஆவின் தொடர்பான ஏராளமான செய்திகள் வந்த வண்ணமே இருக்கின்றன. இதனிடையே ஆவின் நிர்வாகத்தை கண்டித்து முன்னாள் முதலமைச்சர் பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து அனைவரின் கவனமும் ஆவின் பக்கம் திரும்பியுள்ளது.
அடிப்படை கட்டமைப்பு
1980ல் தொடங்கப்பட்ட ஆவின் நிறுவனம் 43வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தனியார் நிறுவனத்தில் இல்லாத நவீன கட்டமைப்பு வசதிகள் ஆவினில் இருப்பதுதான் அதன் தனிச்சிறப்பு.
தமிழ்நாட்டில் கிராம அளவில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், மாவட்ட அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என மூன்றடுக்கு பால் கூட்டுறவு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பால் உற்பத்தி தொழிலில் சுமார் 50 முதல் 60 லட்சம் குடும்பங்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. நாளொன்றுக்கு சுமார் 2 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. அதில் மாநில இணையம், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், மற்றும் 15 ஆயிரத்திற்கும் அதிகமான தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் கீழ் தினமும் சராசரியாக 30 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்து வருகிறது. மீதமுள்ள 1.70 லட்சம் லிட்டர் பாலை ஆங்காங்கே பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நுகர்வோருக்கு விற்பனை செய்வதோடு தனியார் நிறுவனங்களும் கொள்முதல் செய்கின்றன.
ஆவின் நிறுவனம் மூலம் உற்பத்தியாளர்களுக்கு மாடு வாங்குவதற்கு கடன் வசதி, மாட்டிற்கு தேவையான மருத்துவ வசதி மற்றும் சலுகை விலையில் தீவனம் என்று பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தி வருகிறது.
பால் கொள்முதல்
உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லிட்டர் பசும் பால் 35 ரூபாயுக்கும், எருமை பால் ஒரு லிட்டர் 44 ரூபாயுக்கும் ஆவின் கொள்முதல் செய்து வருகிறது. தற்போது பசும் பால் 42 ரூபாய், எருமைப் பால் 51 ரூபாய் என்று லிட்டருக்கு 7 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்று உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டாததால் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
அதிமுக பின்னணியில் போராட்டம்
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கிராம அளவில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், 38 மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு ஒன்றியம், மாநில அளவிலான கூட்டுறவு இணையம் என்ற அனைத்து கட்டமைப்பிலும் அதிமுக பிரமுகர்கள் நிர்வாகிகளாக உள்ளனர். கூட்டுறவு சங்கங்களின் தலைவர், செயலாளர் என்று அனைத்து வகையான பொறுப்புகளிலும் அதிமுகவினர் மற்றும் அவர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இருப்பதால் ஆவின் செயல்பாடுகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதை தவிர்க்க முடியவில்லை. மேலும் கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் பல தனியார் கம்பெனியுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்களாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர்கள் பால், நெய், மோர் போன்ற அத்தியாவசிய பண்டங்களுக்கு செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்துவது, ஆவினுக்கு வருகின்ற பாலை தனியாருக்கு மடை மாற்றி விடுவது, பால் வினியோகத்தை குறைத்து ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படுத்துவது போன்ற குளறுபடிகளை செய்து வருகிறார்கள்.
அமைச்சர் நாசர்
ஆரம்பத்தில் இந்த கட்டமைப்பை புரிந்து கொள்ளாத அமைச்சர் சா.மு.நாசர், பல இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அதில் நடக்கின்ற சிறிய அளவிலான ஊழல்கள் முதல் பெரிய அளவிலான கையூட்டு வரை கண்டுப்பிடித்தார். இவை அனைத்தும் ஆவின் அதிகாரிகளும், அதிமுகவினரும் சேர்ந்து செய்யும் முறைகேடுகள் என்பதைக் கண்டுபிடித்தார். அப்போது தான் கிட்டத்தட்ட 2,000 பால் கூட்டுறவு சங்கங்கள் ஆவின் கொள்முதல் விதிகளை மீறி, தனியாருக்கு பால் வினியோகம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அத்தனை கூட்டுறவு சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். உரிய விளக்கம் அளிக்காவிட்டால், தமிழ்நாடு முழுவதும் உள்ள பால் கொள்முதல் கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும் என்றும் எச்சரித்திருக்கிறார். அதனால் அதிமுகவினர் பதிலுக்கு பால் உற்பத்தியாளர்கள் மூலம், பால் வினியோகத்தை நிறுத்துவதாக ஆவினுக்கும், அரசுக்கும் நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளனர்.
தீர்வு
தனியார் பால் நிறுவனம் உற்பத்தியாளர்களுக்கு உடனுக்குடன் பணம் கொடுப்பதைப் போல் ஆவின் நிறுவனமும் கொடுக்க முயற்சிக்க வேண்டும். அதனை தொடர்ந்து கூட்டுறவு சங்கத்தில் உள்ள ஊழல்வாதிகளை அடையாளம் கண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே ஆவின் நிறுவனத்தை ஓரளவு காப்பாற்ற முடியும்.
– என்.கே.மூர்த்தி.