தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அடுத்து உள்ள வீரிருப்பு கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவாரத்தில் வீரிருப்பை சேர்ந்த காந்தியவாதி முத்தையா என்பவர் தானமாக வழங்கிய ஐந்து ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது தென்னிந்தியாவில் முதல் உலக அமைதி கோபுரம்.
27 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வியல் ஆய்வு மாணவியாக இருந்த பெண் லீலாவதி. வாழ்வியல் முறை குறித்து புத்தரை குறித்து ஆய்வு மேற்கொண்டபோது புத்தரின் மார்க்கத்தால் ஈர்க்கப்பட்டு புத்த துறவியாக துறவறம் ஏற்றார். 2001 முதல் இங்குள்ள புத்த விகாரரில் தொடர்ந்து அமைதிக்கான பிரார்த்தனைகள் நடந்து வருகிறது. மகாயானம் புத்தமத பிக்குவாக செயல்பட்டு வரும் லீலாவதி பிரார்த்தனைகளை நடத்தி வருகிறார்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள உலக அமைதி கோபுரத்துக்கு கடந்த 25 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வந்துள்ளது.2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட உலக அமைதி கோபுர திருப்பணி தொடர்ந்து நடைபெற்று வந்தபோது 2020 ஆம் ஆண்டு புத்தரின் அஸ்தி கோபுரத்தின் உச்சியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது என்பது இந்த உலக அமைதி கோபுரத்தின் கூடுதல் சிறப்பு.
பொதுவாகவே புத்தரின் போதனைகள், தியான பயிற்சி மையங்களாக செயல்பட்டு வரும் தியான மையங்கள் உள்ளன. ஆனால், தமிழகத்தில், காஞ்சிபுரத்தில் நாகர்ஜுனர் வழியில் அசோகச் சக்கரவர்த்தி பின்பற்றக்கூடிய அமைப்பில் கட்டப்பட்ட ஆசியாவின் தென்னிந்திய உலக அமைதி கோபுரம் தமிழகத்தில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வீரிருப்பில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது.இது பிரார்த்தனைக்கான கோவிலாகவும் விளங்கி வருகிறது.
இதுகுறித்து புத்த பிக்கு லீலாவதி கூறும் போது, ”நான் புத்த பிக்வாக துறவறம் ஏற்பதற்கு முன்பாகவும், அதன் பிறகு துறவறம் பூண்டு 27 ஆண்டுகளாக உலக அமைதிக்கான பணியில் என்னை ஈடுபடுத்தி வருகிறேன். 25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த திருப்பணி தற்போது நிறைவடைந்து வருகிற 21 ஆம் தேதி திறப்பு விழா காண உள்ளது” என கூறினார்.