திருப்பதி கோயில் லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் 11 நாட்கள் பரிகார விரத தீட்சையை மேற்கொள்வதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
திருப்பதி கோவில் பிரசாதமான லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில், லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் 11 நாட்கள் பரிகார விரத தீட்சையை மேற்கொள்வதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், ஏழுமலையானே என்னை மன்னிக்கவும், புனிதமாக கருதப்படும் உனது பிரசாத லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்ட நிலையில் 11 நாட்கள் பரிகார விரத தீட்சையை மேற்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியாளர்களின் கேடுகெட்ட மனப்போக்கால் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாகவும், எதையும் செய்யும் மனம் கொண்டவர்கள் மட்டுமே இத்தகைய பாவத்தை செய்ய முடியும் என்றும் பவன் கல்யாண் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஏழுமலையானுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு அனைவரும் பரிகாரம் செய்ய வேண்டும், அதன் ஒரு பகுதியாக விரதம் மேற்கொண்டு ஏழுமலையானை வழிபாடு செய்ய உள்ளதாகவும் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் குண்டூர் நம்பூரில் உள்ள தசாவதார வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் இன்று காலை நேரில் சுவாமி தரிசனம் மேற்கொண்ட துணை முதல்வர் பவன்கல்யாண், அங்கு தனது 11 நாள் விரதத்தை தொடங்கினார். இதனை தொடர்ந்து 11 நாட்கள் காலை, மாலை ஏழுமலையானுக்கு வழிபாடு நடத்த உள்ளார்.