
லாலு பிரசாத்தின் மகன் முதலமைச்சராகவோ, சோனியா காந்தியின் மகன் பிரதமராகவோ ஆக முடியாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.
243 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் நவ.6 மற்றும் நவ.11ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், 2ம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், நவம்பர் 14ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன. இதனையொட்டி பீகார் மாநிலம் சட்டமன்ற தேர்தலுக்கு தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது. அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
அந்தவகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகாரின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் தர்பங்கா பகுதியில் அமித்ஷா தலைமையில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர், “பீகாரில் லாலு பிரசாத் யாதவ் தனது மகன் தேஜஸ்வியை முதல் மந்திரியாக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதேபோல் சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அவர்களால் பிரதமராகவோ, முதலமைச்சராகவோ ஆக முடியாது. ஏனெனில் முதலமைச்சர் பதவியோ, பிரதமர் பதவியோ தற்போது காலியாக இல்லை.

லாலு பிரசாத் மாட்டுத் தீவன ஊழல் மற்றும் வேலைக்கு நிலம் வழங்கும் மோசடி உள்ளிட்ட ஊழல்களில் ஈடுபட்டுள்ளார். அதேசமயம் காங்கிரஸ் கட்சி ரூ. 12 லட்சம் கோடி மதிப்புள்ள ஊழல் வழக்குகளில் ஈடுபட்டுள்ளது. மத்திய அரசு பி.எஃப்.ஐ அமைப்பை தடை செய்து அதன் உறுப்பினர்களை கைது செய்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அவர்களை சிறையில் இருந்து வெளியே வர விடாது. ஆனால் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் பி.எஃப்.ஐ அமைப்பினரை சிறையில் வைத்திருப்பார்களா?
மிதிலா நகரில் சீதா தேவிக்கு கோயில் கட்டப்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் ‘மைதிலி’ மொழிக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்தௌ வழங்கியது. மேலும் அரசியலமைப்புச் சட்டம் மைதிலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.” என்று அவர் தெரிவித்தார்.



