
கர்நாடகாவில் தேவகவுடா கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்ததற்கு அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் சதானந்த கவுடா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

235 இந்தியர்களுடன் தாயகம் திரும்பும் இரண்டாவது விமானம்!
எடியூரப்பா உள்பட மாநிலத்தில் உள்ள மூத்த தலைவர்கள் யாரிடமும் கேட்காமல் பா.ஜ.க. மேலிடம் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்திருப்பதாக சதானந்த கவுடா விமர்சித்துள்ளார்.
டெல்லியில் இருந்த படி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரை இந்த கூட்டணியை முடிவுச் செய்ததாகவும் இந்த விவகாரத்தில் மாநில பா.ஜ.க. தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு விட்டதாகவும், அவர் கவலை தெரிவித்துள்ளார். கடந்த தேர்தல் வரை இரண்டு கட்சிகளும் எதிரும், புதிருமாக இருந்ததாகவும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன் வைத்ததாகவும் குறிப்பிட்ட, சதானந்த கவுடா தற்போது திடீரென இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்திருப்பது, தர்மசங்கடமான நிலைக்கு கொண்டு சென்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பா.ஜ.க.வும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் உடனடியாக இணைந்து செயல்படுவதில் சிக்கல் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சதானந்த கவுடா, இரண்டு கட்சித் தொண்டர்களும் இணைந்து செயல்பட சற்று கால அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் எதிர் எதிராகப் போட்டியிட்டனர். மாநிலத்தில் ஆட்சியை இழந்த பா.ஜ.க., நாடாளுமன்றத் தேர்தலுக்காக மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் அண்மையில் கூட்டணி அமைத்துள்ளது.
வங்கிகள், நிதி நிறுவனத்திற்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!
இந்த கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் சிலர், மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து விலகியுள்ளனர். கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து ஆறு மாதங்கள் ஆகியும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை முடிவெடுக்க இயலாமல் உட்கட்சி குழப்பத்தில் பா.ஜ.க. இருந்து வருகிறது.
இந்த சூழலில், பா.ஜ.க.வின் கூட்டணி முறிவு குறித்து பா.ஜ.க. மூத்த தலைவரான சதானந்த கவுடா அதிருப்தி தெரிவித்திருப்பது விவாதப் பொருளாகியுள்ளது.