மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை அனு அகர்வால் தனது விபத்து குறித்து உருக்கமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
கடந்த 1999 ஆம் ஆண்டில் மும்பை சவுபாத்தி பகுதியில் பலத்த மழை பெய்துகொண்டிருந்த நள்ளிரவு நேரத்தில், ஒரு விருந்தில் பங்கேற்றுவிட்டு பாலிவுட் நடிகை அனு அகர்வால் தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது கார் மூன்று முறை உருண்டு விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கிய அவர், சுமார் 29 நாட்கள் கோமா நிலையில் உயிருக்கு போராடினார். அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்றும், ஒருவேளை பிழைத்தாலும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழ மாட்டார் என்றும் மருத்துவர்கள் கணித்தனர்.
கோமாவில் இருந்து மீண்டபோது அவருக்கு பழைய நினைவுகள் அனைத்தும் மறைந்து போயிருந்தது. தனது முகம், குடும்பம் மற்றும் தான் பிரபலமான நடிகை என்பது கூட தெரியாத அளவிற்கு அவர் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பழைய சம்பவங்கள் குறித்து நடிகை அனு அகர்வால் மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், “மக்கள் எனது முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றியே பேசினார்கள். ஆனால் அந்த விபத்தால் எனது ஒட்டுமொத்த உடலும் நிலைகுலைந்து போனது. எனது மனநலமும் உடல் ஒருங்கிணைப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

யோகா, முறையான ஒழுக்கம், விழிப்புணர்வுடன் கூடிய வாழ்க்கை முறை மற்றும் இயற்கையின் சுழற்சி ஆகியவையே எனது உடல்நிலை தேறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது“ என்றார். தற்போது அவர் திரைப்படத் துறையில் இருந்து விலகி, மனநலம் மற்றும் சுற்றுச்சூழல் நலனுக்காக பணியாற்றி வருகிறார். சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யோகா நிபுணராக மாறியுள்ள அவர், எளிய குழந்தைகளுக்கு யோகா பயிற்றுவித்து வருகிறார்.
வரலாறு காணாத சரிவில் இந்திய ரூபாய்: சாமானியர்களுக்கு எழும் நெருக்கடி
