ஜனவரி 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.


இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், “ஜனவரி 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும். ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு நடைபெறும். அதன்பின் துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மானியங்களுக்கான கோரிக்கைகளை ஆய்வு செய்வதற்கும், தங்கள் அமைச்சகங்கள் / துறைகள் தொடர்பான அறிக்கைகளைத் தயாரிப்பதற்கும் பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் மார்ச் 12 ஆம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு இடைவெளி விடப்படும். மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 வது அமர்வு நடைபெறும். மொத்தம் 66 நாட்களுக்கு 27 அமர்வுகள் நடைபெறும்.
பிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்படும். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் முர்மு உரையுடன் தொடங்கும். கடந்த மாதம் ஜூலை மாதம் பொறுப்பேற்ற முர்மு அவையில் ஆற்றும் முதல் உரை இதுவாகும். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில், இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும், அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியும் , பட்ஜெட் மீதான விவாதத்திற்கு சீதாராமனும் பதிலளிப்பார்” எனக் கூறினார்.
