சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக உடனான கூட்டணியை காங்கிரஸ் முறித்துக்கொண்ட முடிவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டின் யதார்த்த அரசியல் சூழலை உணராமல், காங்கிரஸ் கட்சி அவசரப்பட்டு எடுத்த இந்த முடிவு தவறானது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளாா்.
இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு காங்கிரஸ் உரிய மரியாதை வழங்குவதில்லை என குற்றம்சாட்டியதோடு, அக்கட்சியின் தலைவர்கள் பெருந்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் திமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் முறித்தது தவறான முடிவு என அகிலேஷ் யாதவ் விமர்சித்ததாகவும், தமிழ்நாட்டின் அரசியல் சூழலை சரியாகப் புரிந்துகொள்ள காங்கிரஸ் மாநிலத் தலைமை தவறிவிட்டதாகவும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகிலேஷ் யாதவின் கருத்துகளை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுப்ரியா சுலே மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் ஆகியோரும் ஆதரித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, திமுக இந்தியா கூட்டணியில் இருந்து விலகியதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என ஜான் பிரிட்டாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். அமைச்சர் பதவி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அரசியல் கணக்கீடுகளுக்காக திமுகவுடனான உறவை காங்கிரஸ் பாதித்ததாக அவர் குற்றம்சாட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், திமுக போன்ற முக்கிய பிராந்தியக் கட்சி இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியிருப்பது நல்ல அறிகுறி அல்ல என்றும், இது கூட்டணியின் எதிர்காலத்திற்கு எச்சரிக்கை மணியாக பார்க்கப்பட வேண்டும் என்றும் ஜான் பிரிட்டாஸ் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா கூட்டணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை மற்றும் தமிழ்நாட்டில் ஏற்பட்ட கூட்டணி மாற்றங்கள் குறித்து கூட்டணிக் கட்சிகளே வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்திருப்பது தேசிய அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
நீட் மறுதேர்வு – வினாத்தாள் பாதுகாப்புக்கு களமிறங்கும் இந்திய விமானப்படை
