
டெல்லியில் ஆளும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், அம்மாநில துணைநிலை ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத முதலமைச்சர்கள்!
அந்த மாநிலத்தில் குடிமைப் பணி அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்யும் அதிகாரம் மத்திய அரசு மற்றும் துணைநிலை ஆளுநர் வசமே உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆம் ஆத்மி கட்சி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி அமர்வு, “மாநில அரசின் ஆட்சியையோ, நிர்வாகத்தையோ நிர்வகிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. குடிமைப் பணி அதிகாரிகளை நியமிப்பது, அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்யும் முழு உரிமையும் டெல்லி அரசுக்கு மட்டுமே உள்ளது” என்று தீர்ப்பளித்தார்.
அதைத் தொடர்ந்து, டெல்லி மாநிலத்தில் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிடம் மாற்றம் செய்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், டெல்லி மாநில அரசின் அதிகாரிகள், மத்திய அரசின் அதிகாரிகள், டெல்லி முதலமைச்சர் உள்ளிட்டோர் அடங்கிய தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை அமைத்து அவசரச் சட்டத்தை மத்திய அரசுக் கொண்டு வந்தது.
இந்த அவசரச் சட்டத்தை எதிர்த்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், அந்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். அத்துடன், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார்.
தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டி
இந்த நிலையில், இன்று (மே 27) தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகரை டெல்லி மாநிலத்தின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இச்சந்திப்பில், வருகிற 2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் இரு மாநில முதலமைச்சர்களும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


