“அரை நாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும்”- தெலங்கானா அரசு அதிரடி
தெலங்கானாவில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் அரை நாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மார்ச் 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை மதியம் வரை மட்டுமே பள்ளிகள் இயங்க வேண்டும் என அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் நிர்வாகத்தின் கீழ் உள்ள தொடக்க, மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் அரை நாள் மட்டும் செயல்பட்டாலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழக்கம்போல் மதிய உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதிய உணவு மதியம் 12:30 மணிக்கு வழங்கப்படும்.
இருப்பினும், பத்தாம் வகுப்பு மாணவர்களை எஸ்எஸ்சி பொதுத் தேர்வுக்குத் தயார்படுத்துவதற்கான சிறப்பு வகுப்புகள் தொடரும். பத்தாம் வகுப்பு தேர்வு மையங்கள் உள்ள பள்ளிகள் மதியம் 1.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும் என தெலங்கானா பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.