கர்நாடக தேர்தல்- ரூ.265 கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் மூலமாக இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம், பரிசு பொருட்கள், மதுபானங்களின் மதிப்பு 265 கோடியை எட்டியது.
கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என கடந்த மார்ச் 29 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் என்று எடுத்துச் செல்லப்படும் பணம் வேட்பாளர்களுக்கு வழங்க எடுத்து செல்லப்படும் பரிசுப் பொருட்கள் என பலவற்றை தேர்தல் ஆணைய பறக்கும் படை சோதனை செய்து கைப்பற்று வருகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் கூட நிறைவு பெறாத நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஒட்டுமொத்த பொருட்களின் மதிப்பு 265 கோடியை தாண்டி உள்ளது. இதுவரை மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ள 265 கோடியில் 88 கோடி ரொக்க பணம், 20 கோடி மதிப்பிலான வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த பரிசு பொருட்கள், 55 கோடி 92 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள், 17 கோடி 14 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள், 79 கோடி 47 லட்சம் மதிப்புள்ள தங்க வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த பறிமுதல்கள் தொடர்பாக இதுவரை தேர்தல் ஆணையம் சார்பில் 2036 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் சார்பில் சோதனை நடத்துவது அதிகரிக்கப்பட்டுள்ளதால் பணம் பறிமுதல் தினம் தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது .