தலைநகர் டெல்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள பாலம் (Palam) பகுதியில் இன்று காலை நிகழ்ந்த தீ விபத்தில், மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலம் மெட்ரோ நிலையம் அருகே உள்ள சாத் நகர் (Sadh Nagar) பகுதியில் அமைந்துள்ள ஐந்து அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை சுமார் 7:00 மணியளவில் தீப்பிடித்தது. தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் துணிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு ஏற்பட்ட தீ மளமளவென குடியிருப்புப் பகுதிகள் உள்ள மேல் தளங்களுக்குப் பரவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ ஓரளவிற்குக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயில் சிக்கி மூச்சுத்திணறியும், உடல் கருகியும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதில் 3 சிறுவர்களும் அடங்குவர்.

தீயின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க இரண்டு பேர் கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து கீழே குதித்தனர். பலத்த காயமடைந்த அவர்கள் தற்போது அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கட்டிடத்தின் தரைத்தளத்தில் ஏற்பட்ட மின் கசிவு (Short Circuit) காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குறுகலான தெருக்கள் மற்றும் கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் காரணமாக தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டதாகத் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் துணை நிலை ஆளுநர் ஆகியோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரிய வகை மண்டை ஓட்டு கட்டி: 15 வயது சிறுமிக்கு எய்ம்ஸ் ஜம்மு மருத்துவர்கள் மறுவாழ்வு!
