நடராஜர் சிலை வரலாற்றை கண்முன் நிறுத்துகிறது- பிரதமர் மோடி
பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்ட நடராஜர் சிலை வரலாற்றை கண்முன் நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சீன அதிபர் ஜி ஜின்பிங், சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்டத் தலைவர்கள் டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் நிலையில், அவர்கள் தங்குவதற்கு டெல்லி மற்றும் குர்கானில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் 27 அடி உயரமும், 18 டன் எடையும் கொண்ட நடராஜர் சிலை பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் புகழ்பெற்ற சிற்பியான சுவாமி மலையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஸ்தபதி மற்றும் அவரது குழுவினரால் 7 மாதங்களில் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான நடராஜர் சிலை, நமது வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது. ஜி20 உச்சி மாநாட்டிற்காக உலக நாடுகள் ஒன்று கூடும்போது, இது இந்தியாவின் பழங்கால கலைத்திறன் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக அமையும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.